தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கரோனா; வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்: தொலைபேசியில் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கரோனா; வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்: தொலைபேசியில் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
Updated on
1 min read

தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவனுக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 415 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,241 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 415 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,656 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் முதல் முறையாக கரோனா தொற்று 400-ஐ கடந்துள்ளது.

எம்எல்ஏ.,வுக்கு தொற்று:

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பெ.கீதாஜீவன் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் கீதாஜீவன் எம்எல்ஏக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருண்குமார் உறுதி செய்தார்.

மேலும், அவரது மகள் மற்றும் மருமகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் கீதா ஜீவனிடம் பேசி நலம் விசாரித்தார்.

அதிகரிக்கும் பாதிப்பு:

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையருக்கு ஏற்கனவே தொற்று உறுதியான நிலையில், அந்த மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதுபோல தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு பகுதியில் 9 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 3 பேர் காவலர்கள். மேலும், தூத்துக்குடி துறைமுக ஊழியர் குடியிருப்பு பகுதியில் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையில் ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சண்முகபுரம், தமோதரநகர் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் தொடர்ந்து கரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு அதிகமானோருக்கு சோதனை செய்வதால் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in