

பல்லடம் நீர் வழித்தடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல்லடம் ராம் நகர் பொதுமக்கள் இன்று (ஜூலை 23) செய்தியாளர்களிடம் கூறும்போது, "எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதி அருகே நீர்நிலை புறம்போக்கு உள்ளது. எவ்வித முன் அனுமதியும் இன்றி வருவாய்த்துறையின் அனுமதியும் இன்றி, பல்லடம் நகராட்சி சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிகிறோம்.
நீர்நிலை புறம்போக்கு வழித்தடத்தை தடுத்து அடுக்குமாடி குடியிருப்பு கட்ட உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் நீர்வழித்தடம் கடுமையாக பாதிக்கப்படும். மேற்படி நீர்நிலை வழியாகத்தான் அனுப்பட்டி குட்டையில் இருந்து வேலப்பகவுண்டம்பாளையம், பணிக்கம்பட்டி, பாலசமுத்திரம் வழியாக பல்லடம் வந்தடைந்து நொய்யலில் சேர்கிறது.
ஆகவே, மேற்கண்ட பகுதி குடியிருப்புக்கு உகந்தது அல்ல. கட்டப்படும் கட்டிடங்களும் விரைவில் வலுவிழக்கும். ஆகவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நீர்நிலை புறம்போக்கில் எவ்வித குடியிருப்பையும் கட்ட வேண்டாம். ஆட்சியர் இது தொடர்பாக உரிய ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
பல்லடம் நகராட்சி ஆணையர் கணேசன் கூறும்போது, "பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிதான். ஆனால், குடிசை மாற்று வாரியம் தான் அந்த பணிகளை செய்து வருகிறார்கள்" என்றார்.
குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக பொறியாளர் வெங்கடேசன் கூறுகையில், "பல்லடத்தில் 124 வீடுகள் கட்டப்படுகின்றன. நீர்நிலை புறம்போக்கில் கட்டிடம் கட்டவில்லை. தீர்வை ஏற்பட்ட தரிசு வகை நிலைப்பாட்டில் உள்ள நிலத்தில் தான் வீடு கட்டுகிறோம்" என்றார்.