Published : 23 Jul 2020 06:36 PM
Last Updated : 23 Jul 2020 06:36 PM

இன்னும் எத்தனை அப்பாவி மக்களின் இறப்பினை மறைத்துள்ளீர்கள்?- முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னையில் பதிவு செய்யாமல் விடப்பட்ட 444 மரணங்களை பொது சுகாதாரத்துறை அமைத்த குழு கரோனா மரணமாக பதிவு செய்ததை குறிப்பிட்டு சென்னையிலேயே இப்படி என்றால் மாவட்டங்களில் எத்தனை மறைக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் கரோனா மரணங்களை குறைத்து காட்டுவதாக சந்தேகம் எழுந்தது. ஆங்கில இதழ் ஒன்று சென்னை மாநகராட்சி கரோனா நோய் மரணப்பட்டியலை வெளியிட்டது. இதுகுறித்த கேள்விக்கு அப்போதைய சுகாதாரத்துறைச் செயலர் மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை ஒருங்கிணைப்பு இல்லாததுபோல் குறிப்பிட்டு இதுகுறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் பின்னர் அதுகுறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு பரிந்துரை பேரில் சென்னை மாநகராட்சியில் 444 மரணங்கள் கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டது என பொது சுகாதாரத்துறை அறிவித்து அது தினசரி அரசு வெளியிடும் புல்லட்டினிலும் ஏற்றி காட்டப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

“எனது தொடர்ச்சியான அழுத்தத்திற்கு பின் #COVID19-ல் ஜூன் 10 வரை ‘கணக்கில் வராமல்’ இறந்தவர்களின் எண்ணிக்கை 444 என்று @CMOTamilNadu பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன், ஜூன் 10 வரை தமிழகம் முழுவதும் இறந்தோரின் எண்ணிக்கை வெறும் 326 என்று மூன்றில் ஒரு பங்கு கணக்கை மட்டுமே காட்டினார்கள்.

இன்னும் எத்தனை அப்பாவி மக்களின் இறப்பினை மறைத்துள்ளீர்கள் பழனிசாமி? சென்னையில் மட்டும் 444 இறப்புகளை குறைவாக காட்டிய இந்த அரசு, பிற மாவட்டங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது.

இத்தகைய அப்பட்டமான பொய்களுக்கு பின்னர், இந்த அரசு கூறுவதை எல்லாம் மக்கள் எப்படி நம்புவார்கள்?கணக்கிடத் தவறிய’ 444 என்பது வெறும் எண்ணிக்கை இல்லை; ஒவ்வொரு குடும்பத்தின் பேரிழப்பு.

— M.K.Stalin (@mkstalin) July 23, 2020

இதுவரை கணக்கிடப்படாத இறப்புகள் அனைத்தையும் @CMOTamilNadu மொத்தமாக வெளியிட வேண்டும். பேரிடர் சூழலில் நேர்மையோடும் அறத்தோடும் செயல்படும் அரசே தேவை; மறைக்கும், மக்களை வஞ்சிக்கும் அரசு அல்ல”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x