

கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகரித்துவரும் கரேனா தொற்றை கட்டுப்படுத்த ஏதுவாக இன்று (ஜூலை 23) முதல் ஜூலை 28 வரை ஒருவாரம் முழு ஊரடங்கு தொடங்கியதால் நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா தொற்றால் 170-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதியில் கரோனாவைக் கட்டுப்படுத்த வீடுவீடாகப் பரிசோதனை நடத்தும் பணியில் மருத்துவத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அரசு அதிகாரிகள், வர்த்தகர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஒரு வாரம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மருந்துக்கடை, பால் மற்றும் டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கடைகளும் அனைத்தும் அடைக்கப்பட்டன.
இதனால் நகரமே உள்ளூர் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. ஜூலை 28-ம் தேதிவரை ஒருவாரம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் கொடைக்கானல் நகரில் கரோனா தொற்று பாதிப்பு குறையவாய்ப்புள்ளது.