

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருததுவமனை ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் அங்கு பணியாற்றுவோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை 70893 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மற்றவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டு, கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் துறையினர் கரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குளச்சல் ஏ.எஸ்.பி. முதல் போலீஸ்காரர் வரை இதுவரை 51 போலீஸார் கரோனாவால் பாதிக்கபபட்டுள்ளனர்.
கரோனா தொற்று ஏற்பட்ட போலீஸார் பணியாற்றிய கோட்டாறு, வடசேரி, நேசமணிநகர், பூதப்பாண்டி, நித்திரைவிளை, தக்கலை, சுசீந்திரம், கொல்லங்கோடு, தென்தாமரைகுளம், மார்த்தாண்டம் மதுவிலக்கு, நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு, காவல் கட்டுப்பாட்டு அறை உட்பட காவல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் களியக்காவிளை காவல் நிலைய எஸ்.ஐ. ஒருவருக்கும், போலீஸ்காரர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலையமும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில கரோனா தொற்றால் 15 காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள வங்கி ஊழியருக்கு கரோனா ஏற்பட்டதை தொடர்ந்து வங்கி மூடப்பட்டது. இதைப்போல் மாவட்டம் முழுவதும் பரவலாக கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. 24 மணி நேரத்தில் மேலும் 162 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். க
ரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 முதியவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இதனால் குமரியில் கரோனாவிற்கு இறந்தோர் எண்ணிக்கை 26 பேராக உயர்ந்துள்ளது.