

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் வழங்கப்படாததால், சோதனைச்சாவடிகளில் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு வரும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டங்களிடையே பொது போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவசர காரியங்களுக்கு பிற பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையில் பெரும் குளறுபடிகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இ-பாஸ் கோரி விண்ணப்பப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து 'வந்தே பாரத்' திட்டம் மூலம் இந்தியாவுக்குத் திரும்பி, தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ஊர்களுக்குத் திரும்புபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, தனிமைக்காலம் முடிந்ததும் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இவ்வாறு நீலகிரி மாவட்டத்துக்குத் திரும்பும் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படாததால், அவர்கள் சோதனைச்சாவடிகளிலேயே காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் 2-வது மைலை சேர்ந்த சுனில் மற்றும் செருமுள்ளியை கிரிசன் ஆகியோர் நேற்று (ஜூலை 22) சார்ஜாவிலிருந்து கள்ளிக்கோட்டை விமான நிலையத்துக்கு வந்தனர். விமான நிலையத்திலிருந்து அவர்களை வாடகை கார் மூலம் விமான நிலைய அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்ட எல்லையான நாடுகானி பகுதியில், இருவரையும் காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்துக்குள் அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர்.
இதனால், அங்கிருந்து இருவரும் காலை 6 மணிக்கு இ-பாஸ் விண்ணப்பித்தனர். ஆனால், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாததால், சோதனைச்சாவடி அமைந்துள்ள வனப்பகுதியிலேயே உணவு மற்றும் தண்ணீர் கூட கிடைக்காமல் இருவரும் காத்திருந்தனர்.
இதை அறிந்த கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளை வலியுறுத்தினார். பெரும் போராட்டத்துக்குப் பின்னர் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு தான் இருவரின் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
சுனில் மற்றும் கிரிசன் கூறும் போது, "வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் உள்ள தனிமை முகாம்களில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கேரள மாநிலத்தில் பிற மாநில பயணிகளுக்குத் தனிமை மையங்கள் இல்லை. அவரவர் மாநிலங்களுக்கு சென்று சோதனைச்சாவடி வரை கார் மூலம் அனுப்பி விடுகின்றனர். நீலகிரி மாவட்டம் வந்த எங்களுக்கு அனுமதி வழங்காமல், ஒரு நாள் பகல் மற்றும் இரவு முழுவதும் சோதனைச்சாவடி அருகிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடுகானி பகுதியில் உள்ள டீக்கடைக்காரர்கள் மனிதாபிமான முறையில் உணவு மற்றும் தண்ணீர் வழங்கியுள்ளனர். எங்கள் உறவினர் ஒருவர் கொண்டு வந்த வாகனத்தில் இரவு தூங்கினோம்.
எங்களுடன் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள், நேற்றே தனிமை மையத்துக்குச் சென்று தங்கி விட்டனர். நீலகிரி மாவட்டத்துக்கு வந்தவர்களுக்கு இ-பாஸ் வழங்க பெரும் குளறுபடிகள் நடப்பதால், சோதனைச்சாவடிகளில் பரிதவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்" என்றனர்.
நாடுகானி பகுதி மக்கள் கூறும் போது, "வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தொற்று இருக்கும் பட்சத்தில், அவர்கள் சோதனைச்சாவடி பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் தங்குவதால், ஊர் மக்களுக்கு நோய் கிருமி பரவும் என அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக தனிமை மையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். வெளிநாடுகளிலிருந்து பணியில் இல்லாமல் மிகவும் வேதனையுடன் சொந்த ஊருக்கு வருகின்றனர். அவர்களை இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பது வேதனையானது.
அவசர காரியங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக முடிவுகள் தெரிவிக்கப்படாமல், மூன்று நாட்களுக்குப் பின்னர் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதனால் மக்கள் அவசர காரியங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்" என்றனர்.