Published : 26 Sep 2015 01:25 PM
Last Updated : 26 Sep 2015 01:25 PM

பாகவத மேளா நாட்டிய நாடகங்களில் ஊதியம் வாங்காமல் நடிக்கும் மெலட்டூர் குழுவினர்: மக்களிடம் மீண்டும் பிரபலப்படுத்த முயற்சி

17-ம் நூற்றாண்டில் பிரபலமாகப் பேசப்பட்ட பாகவத மேளா நாட்டிய நாடகங்களை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக குழுவினர் ஊதியம் வாங்காமலேயே அந்த நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

நாயக்கர் மன்னர்கள் காலத்தில் ஆந்திராவிலிருந்து வந்து தஞ்சை பகுதியில் குடியேறிய ஒரு குறிப் பிட்ட பிரிவினரால் பாகவத மேளா நாட்டிய நாடகங்கள் தமிழகத்தில் தடம் பதித்தன. இந்த நாட்டிய நாடகங்கள் காலப்போக்கில் தனது அடையாளத்தை தொலைத்து விட்டன. இப்போது தஞ்சை மாவட்டத்தில் மெலட்டூர், சாலிய மங்கலம், சூலமங்கலம் உள்ளிட்ட ஆறு ஊர்களில் மட்டுமே பாகவத மேளா நாட்டிய நாடக கலைஞர்கள் உள்ளனர். மே மாதம் வரும் நரசிம் மர் ஜெயந்தியின்போது இந்த ஊர்களில் பாகவத மேளா நாட்டிய நாடகங்களை ஒரு வார காலம் நடத்துகின்றனர்.

இந்நிலையில், மெலட்டூர் பாக வத மேளா நாட்டிய நாடக குழு வினர் இந்த நாடகங்களை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்து வதற்காக ஊதியம் பெறாமல் நாடகங்களில் நடித்துக் கொண்டி ருக்கின்றனர். மருத்துவர்கள், பொறியாளர்கள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பல்துறை இளைஞர்கள் இந்தக் குழுவில் உள்ளனர். இவர் கள் அத்தனை பேருமே வெவ் வேறு ஊர்களில் பணியில் இருந் தாலும் நாடக மேடையில் ஒன்று கூடுகின் றனர்.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய இக்குழு வின் இயக்குநர் மகாலிங்கம் என்ற மாலி, ‘‘18-ம் நூற்றாண்டில் வேங்கடராமுடு சாஸ்திரிகள் தெலுங்கில் பாகவத மேளா நாட்டிய நாடகங்களை எழுதி னார். அவர் எழுதிய பிரகலாதா, அரிச்சந்திரா, ருக்மணி காவியம், கிருஷ்ண ஜனன லீலா உள்ளிட்ட 10 நாடகங்களைத்தான் இப்போது நாங்கள் நடத்திக் கொண்டிருக் கிறோம். பிரகலாதா நாடகத்தை மட்டும் இன்னமும் தொன்மை மாறாமல் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில்தான் நடத்துகிறோம்.

நடிகர் அரவிந்த்சாமியின் அப்பா வி.வி.ஸ்வாமி 1964-ல் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கத்தை ஆரம்பித்தார். அப்போது எனக்கு வயது 12. அப்போதிருந்து இந்தக் குழுவில் நான் இருக்கிறேன். நாங்கள் அனை வருமே அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் தான். இந்த நாடகங்களில் பெண் களுக்கு இடமில்லை. ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கின்றனர்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய இக்குழுவின் பெண் கதாபாத்திர கலைஞர் ஆனந்த், ‘‘இதுவரை இந்தியாவின் பல பகுதிகளில் சுமார் 200 நாடகங்களை நடத்தியிருக்கிறோம். ஒரு உன்னதமான கலை அழிந்து போய்விடக் கூடாது என்பதற்காக நாங்கள் சம்பளம் வாங்காமலேயே இந்த நாடகங்களை நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மொழி ஒரு பிரச்சினையாக இருக் கிறது. எனவே, ஆண்டாள் திருக் கல்யாணம் என்ற நாடகத்தை தமிழில் எழுதிக் கொண்டிருக் கிறோம். அதேபோல், சாகுந் தலத்தை மராட்டிய மொழியில் எழுதிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலத்தில் இனம், மொழி களைக் கடந்து இந்த தேசம் ஒற்றுமையாக இருந்ததற்கு சான்று இந்த பாகவத மேளா நாட்டிய நாடகங்கள். இதை உயிர்ப்புடன் வைத்திருக்க தெலங்கானா அரசும் திருப்பதி தேவஸ்தானமும் உதவி செய்துவருகிறது. எங்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் நல்லி குப்புசாமி செட்டியார் தன் னால் ஆன உதவிகளைச் செய் கிறார். இதேபோல், தமிழக அரசும் இந்தக் கலையை ஊக்குவிக்க வேண்டும். தமிழ் மக்களும் இக் கலையின் மகத்துவத்தை உணர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்’’ என்றார்.

கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை

மெலட்டூர் பாகவத மேளா நாடகங்கள் ஆந்திர மாநிலம் பாலக்கொல்லுவில் கடந்த ஆகஸ்ட் 22-ல் நடத்தப்பட்டது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் ஆந்திராவில் 3 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. செப்டம்பர் 6-ல் சென்னை வாணி மஹாலில் தியாக பிரம்ம கான சபா சார்பில் இந்த நாடகம் நடத்தப்பட்டது. டிசம்பர் 26-ல் நுங்கம்பாக்காம் கல்சுரல் அகாடமியிலும் ஜனவரி 2-ல் சென்னை எத்திராஜ் திருமண மண்டபத்தில் இந்தியன் ஃபைன் ஆர்ட் சொஸைட்டியின் சார்பிலும் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடகங்களை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடகங்களை ரசிகர்கள் கட்டணமின்றி இலவசமாகவே கண்டு ரசிக்கலாம் என்பது கூடுதல் தகவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x