குடும்பத்தோடு சிறையில் அடைத்து உணவு வழங்குங்கள்; ஷேர் டெம்போ ஓட்டுநர்கள் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை
ஷேர் டெம்போ இயக்கப்படுவதற்கு அனுமதியளிக்கப்படாத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் ஷேர் டெம்போ ஓட்டுநர்கள் தங்களை குடும்பத்தோடு சிறையிலடைத்து உணவு வழங்குகள் என்று கோரிக்கை விடுத்து புதுச்சேரி அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் டாடா மேஜிக் ஷேர் டெம்போ ஓட்டுநர்கள் சங்க கவுரவத் தலைவரும், புதுச்சேரி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவருமான எஸ்.ஆனந்தகுமார், ஓட்டுநர்கள் சந்திரசேகர், காங்கேயன், மாதவன் ஆகியோர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை செயலாளர் ஆகியோருக்கு தபால் மூலமாகவும், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆகியோருக்கு நேரிலும் இன்று (ஜூலை 23) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
"கரோனா பரவலை தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ஷேர் டெம்போ ஓட்டுநர்கள் சுமார் நான்கு மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தங்கள் நகைகளை அடகு வைத்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வருமானம் எதுவுமில்லை. அதனால் வட்டியும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
கடந்த மாதம் ஆட்டோக்கள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அதனடிப்படையில், பெருந்தலைவர் காமராஜர் ஷேர் டெம்போ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கடந்த கடந்த ஜூன் 11-ம் தேதி மாவட்ட ஆட்சியருக்கும், 12-ம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வருக்கும் ஷேர் டெம்போக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு அனுப்பப்பட்டது.
எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் மீண்டும் மனுக்கள் அனுப்பப்பட்டு, அதிகாரிகளிடம் நேரிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், டெம்போக்களை இயக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.
கடந்த நான்கு மாதங்களில் கரோனா பரவலுக்கு ஷேர் டெம்போக்கள் காரணமில்லை என்பதை உணராமல் ஷேர் டெம்போக்கள் இயக்கப்படுவதால் கரோனா பரவலாம் என்ற ஆதாரமற்ற அச்சத்தில் மாவட்ட நிர்வாகம் உள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் தனிமனித இடவெளியின்றி பயணிகள் பயணிப்பதாக புகார்கள் எழுந்தும் கூட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஷேர் டெம்போ ஓட்டுநர்களை குடும்பத்தோடு சிறையிலடைத்து உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷேர் டெம்போக்களை இயக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால் அடிப்படை உரிமையான உயிர் வாழ்வதற்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள, துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன் குழந்தைகள், குடும்பத்தார், உறவினர்களுடன் ஓட்டுநர்கள் அனைவரும் சிறை நிரப்ப வலியுறுத்தி திரளுவோம்"
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
