

காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான சர்ச்சையில் கோபத்தில் இருந்த திமுக எம்எல்ஏக்களை முதல்வர் சமாதானப்படுத்தும் வகையில் பேசினார். அதைத்தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு வந்தனர். இவ்விவகாரத்தில் முதல்வர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்காததால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று (ஜூலை 23) காலை தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏக்கள் 2-ம் நாளாக சட்டப்பேரவைக்குக் காலையில் வரவில்லை. காலை சிற்றுண்டி தொடர்பான அதிமுகவின் விமர்சனத்துக்கு காங்கிரஸார் அமைதி காத்ததுதான் கோபத்துக்குக் காரணமாக இருந்தது.
இன்று முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கோரிக்கை வைத்தார். அப்போது அவர் சபையில் இல்லாத தலைவர்கள் பற்றி பேசினார். சபையில் இல்லாதவர்களை விமர்சனம் செய்ய அதிகாரம் இல்லை.
ரொட்டி, பால் திட்டத்தை சோனியா காந்தி புதுச்சேரியில் ஆரம்பித்தார். ராஜீவ் காந்தி பெயரிலுள்ள இத்திட்டத்தில் மாணவ, மாணவிகள் பயன் பெறுகிறார்கள். இத்திட்டம் நிறுத்தப்படவில்லை.
ஊட்டச்சத்துக்காக 'அட்சய பாத்திரம்' அமைப்புடன் இணைந்து இட்லி, பொங்கல், உப்புமா தர கருணாநிதி பெயரில் திட்டம் அறிவித்துள்ளோம். இவ்விஷயத்தில், பட்ஜெட்டில் அச்சுப்பிழை உள்ளது.
இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் தந்துள்ளேன். இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தோரும் விமர்சனம் செய்கிறார்கள். அதைப் பற்றி கவலைப்படவில்லை. ராஜீவ் காந்தி மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு உண்டு. அவரால் உருவாக்கப்பட்டேன். அவர் கொடுத்த அங்கீகாரத்தால்தான் அரசியலில் இருக்கிறேன்.
தற்போது திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை வருவதை தவிர்க்கிறார்கள். சட்டப்பேரவை வந்து கருத்தை அவர்கள் பதிவு செய்ய வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்வதே ஜனநாயகம்.
அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் (அதிமுக) கருணாநிதிக்கு சிலை வைக்காதவர்கள் சமாதிக்கு இடம் தராதவர்கள். திமுக எம்எல்ஏக்கள் சபைக்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.
அதையடுத்து அன்பழகன் (அதிமுக) கூறுகையில், "சோனியா தொடக்கி வைத்து ராஜீவ் பெயரிலான திட்டத்தின் பெயரை மாற்றி உள்ளதைத்தான் கேட்டேன். கருணாநிதியை பற்றி பேசவில்லை. அதுபோல் இருந்தால் நான் எம்எல்ஏ பதவி விலக தயார். முதல்வர் பதவி விலக தயாரா?
அமைச்சர்களை கண்டித்துதான் திமுக வெளிநடப்பு செய்தது. ஸ்டாலினை திருப்திப்படுத்த முதல்வர் பேசுகிறார். தவறாக என் மீது குறிப்பிட்ட பொய் குற்றச்சாட்டை முதல்வர் திரும்ப பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனால் முதல்வர், அன்பழகன் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்தனர்.
திமுக எம்எல்ஏ சிவா, "சட்டப்பேரவை குறிப்புகளில் இவ்விஷயம் இருக்கும்" என்று தெரிவித்தார்.
அமைச்சர் கமலக்கண்ணன், "அன்றைய தினம் அதுபோல் அன்பழகன் பேசவில்லை" என்று தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து வாக்குவாதம் நீடித்தது.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம், "இது கூட்டணி அரசு. எங்கள் தலைவர்களை கவுரவப்படுத்துவோம். மரியாதை செய்வோம். உங்கள் ஆட்சி வரும்போது நீங்கள் செய்யுங்கள்" என்று அதிமுகவினரை பார்த்து கூறினார்.
அதற்கு அதிமுக எம்எல்ஏ அன்பழகன், "முதல்வர் அரசியல் செய்கிறார்" என்று தெரிவித்தார்.
அமைச்சர் கமலக்கண்ணனும், "அரசியல் செய்துதான் இங்கு வந்தோம். தொடர்ந்து அரசியல் செய்வோம். அரசியல்தான் செய்கிறோம். நாங்கள் செய்வதுதான் அரசியல்" என்று தெரிவித்தார்.
முதல்வர் நாராயணசாமியும், "எல்லாரும்தான் அரசியல் செய்ய வேண்டும்" என்று பதில் தெரிவித்தார்.
தொடர் வாக்குவாதத்தாலும், அதிமுகவினரை பற்றி முதல்வர் பேசியதை அவை குறிப்பில் நீக்காததை குறிப்பிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசனா ஆகிய நால்வரும் வெளிநடப்பு செய்தனர்.