ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 84 பேருக்கு கரோனா தொற்று; ஆளுநர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில்லாதவர்கள்: ராஜ்பவன் விளக்கம்

படம் உதவி | ராஜ்பவன்.
படம் உதவி | ராஜ்பவன்.
Updated on
1 min read

கிண்டி ஆளுநர் மாளிகையில் கரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டதில் 84 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆளுநர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள், ஆளுநர் அல்லது உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இல்லாதவர்கள் என ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் வசிக்கும் ராஜ்பவன் மாளிகை உள்ளது. பல நூறு ஏக்கர் கொண்ட இந்த அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நேரடியாகவும், வெளிப்புறத்திலும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் 84 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

ஆளுநர் மாளிகை விளக்கம்:

''ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் சிலருக்கு கோவிட் அறிகுறி இருந்ததாக சந்தேகத்தின்பேரில் 147 ஊழியர்களுக்கு நோய்த்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 84 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அனைவரும் சோதிக்கப்பட்டு தற்போது பொது சுகாதாரத்துறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் ராஜ்பவனுக்கு வெளியே பிரதான வாயில் அருகே பணியாற்றும் ஊழியர்கள். பிரதான கட்டிடத்தில் பணியாற்றும் நபர்கள் அல்ல. எந்த ஒரு நபரும் ஆளுநருடனோ அல்லது ஆளுநர் மாளிகை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடனோ நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள்.

ஆளுநர் மாளிகையில் அனைத்துவகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி மூலம் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிருமி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலை குறித்து ஆளுநர் மாளிகை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது''.

இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in