

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைமையகமான சென்னை கமலாலயத்தில் இன்று (ஜூலை 23) எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓபிசி, எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீடு குறித்துப் பேசுகிறார். இந்தியா முழுவதும் பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு 15%. பழங்குடி மக்களுக்கு 7.5%. இந்த சதவீதம் மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களைப் பொறுத்து வேறுபடும். தமிழகத்தில் மக்கள்தொகையின் அடிப்படையில் பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு குறைந்தது 20% இருக்க வேண்டும்.
இந்த 20 சதவீதத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டியது யார்? தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது திமுக. இவர் துணை முதல்வராக ஆட்சியிலிருந்தார். அப்போது என்ன செய்துகொண்டிருந்தார்?
திமுக எம்.பி.க்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா? தாழ்த்தப்பட்டவர்களா என, தலைமைச் செயலாளரைச் சந்தித்த பிறகு கேட்கின்றனர். இன்று வரை அப்படி பேசிய எம்.பி.க்களை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. திறமையால் கடின உழைப்பால் முன்னேறிய நீதிபதிகளை ஆர்.எஸ்.பாரதி இழிவாகப் பேசினார்.
கந்த சஷ்டி கவசத்தை மிகச்சிறிய கூட்டம் அருவருக்கத்தக்க வகையில் பேசியது. இன்று வரை அதற்கு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. சரத்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? கறுப்பர் கூட்டத்திற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்? ஸ்டாலின் அதனை விளக்க வேண்டும். இந்துக்களின் மனம் புண்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமுதாயம், இந்து சமுதாயம் இதற்கு எதிர்வினையாற்றும் என்பதை ஸ்டாலினுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன்".
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.