

கரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் அனைத்துக் கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் எதுவும் நடத்த இயலாத வகையில் தற்போதுவரை கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பிளஸ் 2 தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகின. மற்ற அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்பப் பட்டயப்படிப்புகள் தேர்வு குறித்து சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து யூஜிசியும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையும் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டன. செப்டம்பர் மாதத்துக்குள் இறுதியாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் திறக்க முடியாத சூழ்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, தமிழகம் இதுகுறித்து முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். ஆனால் முதுநிலை இறுதியாண்டுத் தேர்வு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.
வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக உயர்மட்டக் குழு தன்னுடைய பரிந்துரையில் தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி,
* முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும்.
* முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்.
* இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும்.
* முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்.
* அதேபோன்று எம்சிஏ முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்.
இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்விலிருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவான ஒரு அரசாணை வெளியிட உயர் கல்வித்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு பற்றி முதல்வர் குறிப்பிடாததால் தேர்வு உண்டா? இல்லையா? எனக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.