

காரைக்காலில் தனது வீட்டின் அருகில் வசிப்போருக்கு முகக்கவசம், சானிட்டைசர், ஆர்சனிக் ஆல்பம் மருந்து வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடிய சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் - சத்யா தம்பதியரின் மகன் நந்த கிஷோர். தற்போது யுகேஜி படித்து வரும் இச்சிறுவன் தனது ஐந்தாவது பிறந்த நாளை நேற்று (ஜூலை 22) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டாடி மகிழ்ந்தான்.
தனது பிறந்தநாளையொட்டி கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நேற்று இரவு தான் வசிக்கும் தெருவில் அமைந்துள்ள வீடுகள் ஒவ்வொன்றுக்கும் சென்று 50 பேருக்கு முகக்கவசம், சானிட்டைசர், ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்து ஆகியவற்றுடன் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு அப்பகுதி மக்களின் வாழ்த்துகளை பெற்றான்.
சிறுவனின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அங்கு வசிப்போர் தெரிவித்தனர்.