

தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு உள்ள பகுதியில் தடுப்புகளை அமைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி தாமோதர நகரில் சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் எஸ்பி ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். படம்: என்.ராஜேஷ் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. தூத்துக்குடி மாநகரில் சண்முகபுரம் பிரதான சாலை, தாமோதரநகர் பிரதான சாலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்களை மாநகராட்சி ஊழியர்கள் தகர ஷீட்கள் மூலம் அடைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தாமோதரநகர் மக்கள் 100 பேர் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி., ஜெயக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருசில நாட்கள் மட்டுமே இந்த அடைப்புஇருக்கும். கரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததும் அடைப்பு அகற்றப்பட்டுவிடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுபோல், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியில் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 3 வாரங்களாக அப்பகுதியை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. இந்நிலையில் வாணியக்குடி கிராம மக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படாத நிலையில் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.