Published : 23 Jul 2020 07:38 AM
Last Updated : 23 Jul 2020 07:38 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி பணியாளர்கள் ஊதியம் இன்றி தவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளபல்வேறு ஊராட்சிகளில் ஊதியம்கிடைக்காமல் தூய்மைப் பணியாளர்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் சுகாதாரப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 363 ஊராட்சிகளிலும் வீடுகளில் சேரும் குப்பையை சேகரித்து அகற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பல ஊராட்சிகளில் பலருக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று தூய்மைப் பணியாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர். பணியில் இருப்பவர்கள் ஊதியம் வராத விரக்தியால் துப்புரவுப் பணிகளையும் பெயரளவில் செய்கின்றனர். இதனால் புறநகர் மற்றும் கிராமப்புறங்களின் சுகாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக மாநில நிதிக்குழு மானியம் வரவில்லை, கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு செலவும் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து, உள்ளாட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ‘கரோனா' தடுப்பு நடவடிக்கைக்கு, அரசு ஒதுக்கீடு செய்த தொகையை விட, கூடுதல் செலவாகிறது. குறிப்பாக, தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பு உபகரணங்கள், கிருமிநாசினி உள்ளிட்டவற்றுக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையில், வரி வருவாய் இல்லை என்பதால் தூய்மைப் பணியாளருக்கு ஊதியம் போட முடியாத நிலை உருவாகியுள்ளது. அவர்களில் பலரும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். ஊதியம் இல்லாவிட்டால் பணிக்கு வருவதே கடினமாகிவிடும். இதனால், ‘கரோனா' தடுப்பு நடவடிக்கையிலும், தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், அரசு நிதி வழங்கினால் மட்டுமே தூய்மைப் பணியாளருக்கு ஊதியம் போட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x