

கடலூர் மாவட்டத்தில் நாள்தோறும் வீடு வீடாகச் சென்று கரோனா கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிய நாள்தோறும் வீடு வீடாகச் சென்று விவரங்களை பெறும் பணியில் முதல் நிலை கண் காணிப்பு அலுவலர் என்ற நிலையில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஈடுபடுத் தப்படுகின்றனர். 2,500-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக் குழுக்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 21-ம் தேதி முதல் ஒரு வாரம் ஈடுபட உள்ளனர்.
இப்பணியின்போது கடை பிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து வட்டார அளவிலான விழிப்புணர்வு குழுவினரால் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, நுகர்வு மற்றும் சுவை திறன் இழப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விவரங்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
கரோனா தொற்று அறிகுறிகள் மற்றும் இணை நோய் உள்ள நபர்கள் குறித்து நாள்தோறும் சேகரிக்கும் விவரங்களை ஊராட்சி அளவில் உரிய படிவத்தில் சுருக்க விவரம் தயாரித்து அத்துடன் குடும்ப வாரியான விவரங்கள் சேகரிக்கும் படிவங்களை அன்றைய தினமே ஊரக பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் சுகாதார மேற்பார்வை யாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
தேவையின் அடிப்படையில் சிறப்பு முகாம்கள் நடத்தி தேவைப்படுவோருக்கு மருத்துவ முகாமிலேயே ‘ஸ்வாப்’ பரிசோதனை மேற்கொண்டு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.