Published : 22 Jul 2020 08:00 PM
Last Updated : 22 Jul 2020 08:00 PM

மழை பெய்தும் தண்ணீரைத் தேக்க முடியவில்லை: நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் என்னவானது?- நீர் ஆதார வல்லுநர்கள் கேள்வி 

தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளதால் தண்ணீரைத் தேக்க உருவாக்கப்பட்ட நவீன நீர் வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர் ஆதார வல்லுநர்கள், ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் சிறப்பாகப் பெய்து வருகிறது. அந்த மழை இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என தமிழக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நமக்கு கிடைக்கும் மழை நீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர் வழிச்சாலை திட்ட வடிவமைப்பாளரும், அதன் பொறியாளருமான ஏ.சி.காமராஜ் உள்பட நீர் ஆதார வல்லுநர்கள், ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஏ.சி.காமராஜ் கூறுகையில், ‘‘நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்,தமிழகத்தில் மட்டும் ஆண்டிற்க சராசரியாக 177 டி .எம்.சி. தண்ணீர் வெள்ளமாக பெரும் சேதாரத்தை ஏற்படுத்திவிட்டு கடலுக்கு போகிறதென்று என்பது. (தமிழக அரசின் புள்ளி விபரம்). ஆக நமக்கு போதுமான தண்ணீர் ஆண்டுதோறும் கிடைக்கிறது என்பது தெளிவாகிறது.

இவ்வாறு ஆண்டுதோறும் நமக்குக் கிடைக்கும் வெள்ள நீரைத் தேக்கி உபயோகிக்க நாம் இருக்கும் நீர்நிலைகளை மேம்படுத்துவதோடு தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய நீராதாரங்களை உருவாக்குவது அவசியம்.

அதற்காக கொடுக்கப்பட்டதுதான் தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் . இது கங்கா - குமரி தேசிய நீர்வழிச்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

காமராஜரின் 9 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தில் 17 அணைகள் கட்டப்பட்டன. ஏராளமான மின்சாரம் கிடைத்தது. தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை எனும் ஒரு திட்டத்தில் மட்டுமே இந்த அணைகள் அனைத்திலும் தேக்கும் அளவு தண்ணீரை தேக்க முடியும். மின்சாரமும் கிடைக்கும்.

தமிழக அரசு தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத்திட்டம் நிறைவேற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் உறுதி கொடுத்துள்ளது . ஆயினும் தமிழக அரசு நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் குறித்து ஆய்வறிக்கை தயாரித்திட நிதி ஒதுக்குவதில் கால தாமதமாகிறது.

எனவே கரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் நாளை தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத்திட்டம் குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

இதற்கிடையில் கோதாவரி காவிரி பிணைப்பை நவீன நீர்வழிச்சாலை மூலம் செயல்படுத்திட மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை இதற்காக இருமுறை சந்தித்துள்ளோம்.

அவரும் அதற்கு ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார். மக்களவை தலைமைச் செயலகமும் எங்கள் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய ஜல் சக்தி துறைக்கு பரிந்துரைத்துள்ளது.

கோதாவரி காவிரி பிணைப்பு நிறைவேறும்போது தமிழகம் உட்பட ஆந்திரா, தெலுங்கானா , மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களுக்கும் இன்னும் ஏராளமான தண்ணீர் கிடைக்கும். அதன் மூலம் குடிநீர் , பாசனம் , மின்சாரம், புதிய வேலைவாய்ப்பு என ஏராளமான பலன்களை அடைய முடியும்.

கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவிலிருந்து நம் நாட்டை மீட்க இத்திட்டம் பேருதவியாக இருக்கும் என்பதே பெரும்பாலான வல்லுனர்களின் கருத்து.

ஏனென்றால், தண்ணீரே ஒரு நாட்டின் விவசாயம் , தொழில், அனைத்து வளர்ச்சி, முன்னேற்ற மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிப்படை பிரதானம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x