

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ராணுவ வீரரின் மனைவி, தாயாரைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் தடயத்திற்காக கிணற்று நீரை விடிய, விடிய வெளியேற்றியும் ஒன்றும் கிடைக்காததால் போலீஸார் ஏமாற்றமடைந்தனர்.
மேலும் ஒரு வாரத்திற்கு மேலாக தடயம் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபனின் மனைவி சினேகா (30), தாயார் ராஜகுமாரி (61) ஆகிய இருவரை ஜூலை 14-ம் தேதி அதிகாலை கொன்றுவிட்டு 75 பவுன் நகைகளை சிலர் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்தனர். மானாமதுரை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேலும் இந்த வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதுவரை உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவில் டிஎஸ்பி ரஜேஷ் தலைமையிலான போலீஸார், சில தகவல்களின் அடிப்படையில் தடயத்தை தேடி ராணுவவீரர் ஸ்டீபனின் தோட்டில் உள்ள கிணற்றில் தண்ணீரை விடிய, விடிய வெளியேற்றினர்.
ஆனால் ஒன்றும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். கொலை நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் தடயம் கிடைக்காமல் போலீஸார் தொடர்ந்து திணறி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘மொபைல் சிக்னல், சமீபகாலமாக முடுக்கூரணிக்கு வந்த சென்றவர்களையும் விசாரித்துவிட்டோம். இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.
தற்போது முடுக்கூரணி மற்றும் அக்கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளோரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம்,’ என்று கூறினர்.