மருத்துவமனைக்குச் செல்ல அடம்பிடிக்கும் கரோனா நோயாளிகள்: போலீஸ் உதவியை நாடும் மதுரை மாநகராட்சி, சுகாதாரத்துறையினர்

மருத்துவமனைக்குச் செல்ல அடம்பிடிக்கும் கரோனா நோயாளிகள்: போலீஸ் உதவியை நாடும் மதுரை மாநகராட்சி, சுகாதாரத்துறையினர்

Published on

மதுரையில் ஒருபுறம் நோயாளிகள் இறப்பும், நோய்ப் பரவலும் அதிகமாகும் நிலையில் மற்றொருபுறம் இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளை விரைவாக சிகிச்சைக்கு அனுப்ப முடியாமல் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் படாதபாடு படுகின்றனர்.

ஆரம்பத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ‘கரோனா’ பாதிப்பு அதிகமாகப் பரவியது. தற்போது மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் ‘கரோனா’ தொற்று பரவலும், அதன் உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது.

இந்த நோயைக் கட்டுப்படுத்த மதுரையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் பரிசோதனைகளை அதிகப்படுத்தி, நோயாளிகளை விரைவாக அடையாளம் கண்டு சிகிச்சைப்பெற வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மாநகராட்சிப்பகுதியில் மட்டுமே 11 நடமாடும் பரிசோதனை மையங்களும், 155 நிரந்தர பரிசோதனை மையங்களும் ஏற்படுத்தப்பட்டு ஒரு நாளைக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு தற்போது மதுரை மாவட்டத்தில் ‘கரோனா’ பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்போது கடந்த மாதத்தை ஒப்பிடும் போது இந்த மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. ஆனால், தினமும் சராசரியாக 5 பேரும், சில நாட்களில் 7 பேர், 8 பேர், 9 பேர் என்று உயிரிழிப்பு நடக்கிறது. நேற்று வரை 167 பேர் இந்த நோய்க்கு மதுரையில் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி மண்டல சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நோயாளிகளைக் கண்டறிவதும், அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதுமே எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

ஒரு நோயாளிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் முகவரியைக் கண்டறிந்து நேரில் சென்று மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்துகிறோம். ஆனால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம் என்கிறார்கள்.

மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் போதுமான வசதிகள் இல்லாமல் நோயாளிகளை வீட்டிலே தனிமைப்படுத்தக்கூடாது என்று சுகாதாரத்துறை எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதனால், அவர்களை மாநகராட்சி மருத்துவமனை மையங்களுக்கோ அல்லது அரசு ராஜாஜி மருத்துவமனைக்கோ சென்று மருத்துவர்களைப் பார்த்துவிட்டு அவர்கள் சொன்னால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு டெலிமெடிசன் மூலம் சிகிச்சைபெறுங்கள் என்கிறோம்.

ஆனால், அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களை பார்க்க செல்வதில்லை. ஒரு நோயாளியை மருத்துவரை பார்க்க வைக்க பல முறை அவரது வீட்டிற்கு செல்ல வேண்டிய உள்ளது.

சிலரை அனுப்ப போலீஸார் உதவியை நாட வேண்டியது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோயாளிகள் இருந்து சிகிச்சைக்கு தாமதமாக செல்வோர் மட்டுமே தற்போது உயிரிழக்கின்றனர்.

உடல் ஆரோக்கியம் அறிகுறி இல்லாதவர்களை மருத்துவர்களே வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சைப்பெற அனுமதி வழங்குகிறார்கள். ஆனால், நோயாளிகளோ எங்கு வீட்டில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்க மாட்டார்களோ என்ற அச்சத்தில் மருத்துவமனைக்கு போக மறுக்கிறார்கள்.

சிலர் போய்விட்டதாக ஏமாற்றி வீட்டிலே இருக்கிறார்கள். மருத்துவமனையில் விசாரித்தால் அவர் செல்லவில்லை என்பது தெரிகிறது.

இப்படிப்பட்டவர்களாலே இந்த நோய் எளிதாக மற்றவர்களுக்குப் பரவுகிறது. ‘கரோனா’வை ஒழிக்க அந்த நோயாளிகளுடன் தினமும் நாங்கள் போராட வேண்டிய உள்ளது, ’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in