Published : 22 Jul 2020 07:23 PM
Last Updated : 22 Jul 2020 07:23 PM

தமிழகத்தில் முதல் முறையாக பிளாஸ்மா வங்கி; ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறப்பு: பிளாஸ்மா தானம் செய்த எம்எல்ஏ

தமிழகத்திலேயே முதல் முறையாக கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் இதனைத் திறந்து வைத்தார். ஓராண்டு வரை இங்கு பிளாஸ்மாவைப் பாதுகாக்கும் வசதி உள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2.4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கி இன்று திறக்கப்பட்டது. சோதனை முயற்சியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 26 நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 24 பேர் வெற்றிகராமாக சிகிச்சையில் தேர்ச்சி பெற்றனர்.

அறிகுறி இல்லாத நோயாளிகள், இணை நோய் பாதிப்புள்ளவர்கள், தீவிர சிகிச்சையில் உள்ளவர்கள் என நோயாளிகள் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பிளாஸ்மா சிகிச்சைக்கான பிளாஸ்மாவை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட நல்ல உடல் நிலையில் உள்ள ஒருவர் 14 நாட்களுக்குப் பிறகு தானம் செய்யலாம்.

18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யத் தகுதியானவர்கள். அதேவேளையில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் இருப்பவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முடியாது. இணை நோய்கள், தொற்று நோய் இல்லாதவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம்.

தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியில் ஒரே நேரத்தில் 8 பேர் வரை பிளாஸ்மா தானம் செய்ய முடியும்.

தானம் பெறப்பட்ட பிளாஸ்மாக்களை மைனஸ் 40 டிகிரி வரை குளிரூட்டப்பட்ட அறையில் வைக்க முடியும். இவற்றை ஓராண்டு வரை சேமித்து வைக்க முடியும். அதற்கான வங்கி இன்று திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிளாஸ்மா வங்கியைத் திறந்துவைத்தார்.

இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறிய பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகர் உட்பட 2 பேர் பிளாஸ்மா தானம் அளித்தனர்.

இன்று ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கி தமிழகத்திலேயே முதல் வங்கியாகும். விரைவில் ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை, திருச்சி, கோவை மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x