சாத்தான்குளம் போலீஸ் தாக்கியதில் மேலும் ஒரு இளைஞர் பலியானதாக புகார்: சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்
சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளத்தை சேர்ந்த சுந்தரம் மகன் மகேந்திரன் (28). இவரை ஒரு கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் போலீஸார் கடந்த மே 23-ம் தேதி இரவு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு பிறகு அவரை 24-ம் தேதி மாலை விடுவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜூன் 11-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஜூன் 13-ம் தேதி அவர் உயிரிழந்துள்ளார்.
விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது போலீஸார் கொடூரமாகத் தாக்கியதால் தான் மகேந்திரன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகேந்திரனின் தாய் வடிவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மகேந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் மகேந்திரன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தங்கள் விசாரணையை இன்று தொடங்கினர். சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரை நேரில் சந்தித்து, மகேந்திரன் மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்களை முறைப்படி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஆரம்பக் கட்ட விசாரணையை அவர் தொடங்கினார்.
மகேந்திரனின் தாய் வடிவு தூத்துக்குடி கேவிகே நகரில் உள்ள தனது மகள் சந்தனமாரி (மகேந்திரனின் சகோதரி) வீட்டில் தங்கியுள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீஸார் இன்று மாலை 4 மணியளவில் அந்த வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீடு பூட்டியிருந்ததால் சிறிது நேரம் வெளியே காத்திருந்தனர். பின்னர் சந்தனமாரி மட்டும் வீட்டுக்கு வந்தார். அவரிடம் அவரது சகோதரர் மகேந்திரன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும் வடிவு தனது வழக்கறிஞர் வீட்டில் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அவரையும் வரவழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
