

தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சாலையோரத்தில் பரிதாபமாக ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி ஒருவரை, வருவாய் கோட்டாட்சியர் மீட்டு அரசு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு தன்னார்வலர் ஒருவர் உதவியுள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளே பேருந்து நிறுத்தத்தில், கடந்த மூன்று மாதங்களாக 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், அங்கு வரும் நபர்கள் அளிக்கும் உணவைச் சாப்பிட்டு விட்டு, அங்கேயே தங்கியிருந்தார்.
கரோனா வார்டில் உள்ளவர்களுக்குத் தினமும் உணவு அளிக்கும் தன்னார்வலரான ரியாஸ்சுதீன் என்பவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பார்த்துவிட்டு, தினமும் மூதாட்டிக்கு உணவு அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 21) வழக்கம் போல, மூதாட்டிக்கு உணவு அளிக்க ரியாஸ்சுதீன் தேடிப் பார்த்தபோது, பேருந்து நிறுத்தத்தில் காணவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, மூதாட்டி, மருத்துவமனை ஊழியர்களால் அடித்துத் துரத்தப்பட்டு, மருத்துவமனை வெளியே சாலையோரத்தில் படுத்துக் கிடப்பது தெரியவந்தது.
அங்கு சென்று மூதாட்டிக்கு உணவு வழங்கிவிட்டு, விசாரித்தபோது, பிள்ளைகள் கைவிட்டுவிட்டதாக மட்டும் சொல்லி அழுதுள்ளார். மற்ற விவரங்களைக் கேட்டபோது மூதாட்டிக்குச் சொல்லத் தெரியவில்லை. அவரின் உடைகள் கிழிந்த நிலையில் இருந்ததால், பின்னர் புதிய உடை ஒன்றை எடுத்து, மூதாட்டிக்குக் கொடுத்துவிட்டு, அங்குள்ள கடை உரிமையாளிடம் சாப்பாடு கேட்டால் தரும்படியும் அதற்காக முன்பணத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த மூதாட்டியின் நிலை குறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணிக்குத் தகவல் அளித்துள்ளார். தகவலின் அடிப்படையில் இன்று (ஜூலை 22) மருத்துவமனை வளாகத்துக்கு வந்த வேலுமணி உள்ளிட்ட அதிகாரிகள் மூதாட்டியை மீட்டனர்.
இதுகுறித்து வேலுமணி கூறும்போது, "ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு, கரோனா பரிசோதனை எடுக்க மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். கரோனா பரிசோதனை முடிவு வந்த பிறகு, அவரை தஞ்சாவூர் வடக்கு வாசலில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்துப் பராமரிப்போம், அவர் உடல் நலம் தேறிய பின்னர் அவருடைய குடும்பம் குறித்து விசாரித்து, குடும்பத்தாரிடம் ஒப்படைப்போம்" என்றார்.