Published : 22 Jul 2020 05:24 PM
Last Updated : 22 Jul 2020 05:24 PM

பார்வை இழந்த பின்னும் சரித்திரம் படைத்தவர்: கோவை ஞானி குறித்து நடிகர் சிவகுமார் புகழாஞ்சலி

‘ஒரு மனிதனின் வாழ்க்கையில் கண் பார்வை போனால் 75 சதவீத வாழ்க்கை இருளாகிவிடும். ஆனால் இவர் பார்வை இழந்த பின்னும் 75 சதவீத வாழ்க்கையை வாழ்ந்து சரித்திரமாகி விட்டார்’ என மார்க்சிய அறிஞர் கோவை ஞானி குறித்து திரைப்பட நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார்.

இந்நிலையில் அவரின் மறைவு குறித்து சிவகுமார் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

''கோவை ஞானி மார்க்சிய சிந்தனையாளர். அவர் பிறந்தது கோவை மாவட்டம் சோமனூர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படித்துக் குறிச்சி தமிழாசிரியராகப் பணியேற்றார். துணைவியார் குறிச்சியில் ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞானி 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கில நூல்களை அளவுக்கு அதிகமான நேரம் படித்ததால் முழுமையாகத் தன் பார்வையை இழந்தவர். இருப்பினும் மனைவியின் ஒத்துழைப்போடு உலகளாவிய மார்க்சியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் வரலாறு போன்றவற்றை - துணைக்கு எம்.ஏ., பி.ஏ., பட்டதாரிகளை வைத்துப் படிக்கச் சொல்ல - அவற்றை மனதில் உள்வாங்கி 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

பார்வை இழந்த பின்பும், கேரளா, கோவை, சென்னை மேடைகளில் கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு பேசியவர். திடீரென்று மனைவிக்கு உடல் நலம் குறைய ஆரம்பித்தது. சென்னையில் வேலை பார்க்கும் இரண்டாவது மகன் மாதவன், தாயாரைச் சென்னைக்குக் கூட்டிச் சென்று ரேடியோ தெரபி அளித்தார்.

மருத்துவமனையில் டாக்டர் அனுமதி பெற்று, சென்னையில் நடந்த என் மகன் கார்த்தி- ரஞ்சனி திருமண வரவேற்பில் இந்திராணி அம்மையாரும், ஞானியும் கலந்து கொள்ள சிஎஸ்ஐ பள்ளியில் அவரோடு ஆசிரியராகப் பணிபுரிந்த நண்பர் மனோகரன் ஏற்பாடு செய்தார். திருமண நிகழ்வு முடிந்து 3 மாதங்களில் அம்மையார் இயற்கை எய்தினார். மனைவி இறந்த பின்னும் உடைந்து போய்விடாமல் 9 ஆண்டுகளாக, உதவியாளரை வைத்துக்கொண்டு படித்தும், எழுதியும் வந்த மகா மனிதர்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் கண்பார்வை போனால் 75 சதவீத வாழ்க்கை இருளாகி விடும். இவர் பார்வை இழந்தபின்னும் 75 சதவீத வாழ்க்கையை வாழ்ந்து சரித்திரமாகி விட்டார்''.

இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x