

24 மணிநேரத்தில் கரோனா பரிசோதனை முடிவுகள் தெரியவரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று (ஜூலை 21) வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 541 ஆக உள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி குமார் நகர் பகுதியில் மாநகர சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் கண்டறியும் முகாமை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் இன்று (ஜூலை 22) ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமே திருப்பூர் மாவட்டத்தில் 93 சதவீதம் கரோனா தொற்று பரவி உள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது கண்காணிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநகராட்சிப் பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
24 மணிநேரத்தில் கரோனா பரிசோதனை முடிவுகள் தெரியவரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியூர்களில் இருந்து திருப்பூர் வருபவர்களுக்கு இ-பாஸ் முறையில் அனுமதி வழங்கப்படுகிறது"
இவ்வாறு ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கரோனா பரிசோதனை தாமதமாக நடைபெற்று வருவதாக பலரும் கருதி வந்த நிலையில், ஆட்சியரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.