

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் பதிவை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் இன்று (ஜூலை 22) நடைபெற்றது.
இந்த வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு வேன் உரிமையாளர்கள் சங்கம், தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பள்ளிப் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பு, வாடகைக் கார் உரிமையாளர்கள் சங்கம், அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவையும் பங்கேற்றுள்ளன.
இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு லாரி நிறுத்துமிடங்களிலும், சாலையோரங்களிலும், குட்ஷெட்டிலும் ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன இணைவு பெற்ற திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜோசப், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:
"கரோனாவால் கடந்த 4 மாதங்களாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, லாரி ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களும் கடன் மாத தவணை செலுத்த முடியாமலும், ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாமலும் கடும் வேதனையில் உள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் சில லாரிகளுக்கு புக்கிங் கிடைத்தாலும், தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து வருவதால் கட்டுப்படியாவதில்லை. இதனால், ஏராளமான லாரிகள் பல நாட்களாக நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்தச்சூழலில், நிறுத்தப்பட்டுள்ள லாரிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதால், லாரி உரிமையாளர்கள் செல்போன் எண்ணுக்கு அபராதம் கட்டச் சொல்லி தகவல் வருகிறது.
அதேபோல், பழைய வாகனங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் முடிவு லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்களை பல லட்சம் ரூபாய் கடனாளிகள் ஆக்கிவிடும்.
எனவே, பழைய லாரிகளை திரும்பப் பெறும் முடிவை அரசு கைவிட வேண்டும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், பொய் வழக்கு பதிவு செய்யும் காவல்துறையினரைக் கண்டித்தும், சாலை வரியை ஓராண்டுக்கு ரத்து செய்ய வலியுறுத்தியும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் காரணமாக பாடாலுர், பெரம்பலூர், குளித்தலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான லாரிகள் ஓடவில்லை"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.