

மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 86.
கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் வசித்துவந்த கோவை ஞானிக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அச்சமயம் அவர் மகன் பாரிவள்ளல் அருகில் இருந்துள்ளார்.
‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார்.
கோவை ஞானியின் இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றினார். மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டவர். கோவை ஞானி - இந்திராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள். மனைவி இந்திராணி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
இவர் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
நீரிழிவு பாதிப்பு காரணமாகக் கண் பார்வையை இழந்த நிலையிலும், இறுதி மூச்சு உள்ளவரை இலக்கியப் பணியாற்றினார்.
கடந்த ஜூலை 1-ம் தேதி அவரது பிறந்த நாளைப் போற்றும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நடுப்பக்கத்தில் சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் சாதனையாளர் விருது பெற்றவர் கோவை ஞானி. உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் தன் உதவியாளருடன் வந்திருந்து முழு நாள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.