கரோனா ஊரடங்கு எதிரொலி: சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா ரத்து

கரோனா ஊரடங்கு எதிரொலி: சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா ரத்து
Updated on
1 min read

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தபசு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தபசு விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் கோமதி அம்பாள் வீதியுலா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு 11-ம் நாள் இரவு 12 மணியளவில் நடைபெறும்.

அப்போது கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக சுவாமி காட்சி கொடுப்பார். இந்த காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, நடப்பாண்டில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தபசு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை (23-ம் தேதி) நடைபெற இருந்த கொடியேற்றம், தினசரி நடைபெறும் சுவாமி வீதியுலா, ஆகஸ்ட் 1-ம் தேதி இரவு 12 மணியளவில் நடைபெற வேண்டிய ஆடித்தபசு காட்சி போன்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் தினமும் சுவாமிக்கு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வழக்கம்போல் நடைபெறும்.

மாலை பூஜைகளுக்கு மண்டகப்படிதாரர்கள் அபிஷேகப் பொருட்கள் மற்றும் பூஜைப் பொருட்களை வழங்கினால் அதன் மூலம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

பூஜை நேரங்களில் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in