ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கரோனா; கரூர் நீதிமன்றம் மூடல்
கரூரில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என 10 பேருக்குக் கரோனா தொற்று இன்று உறுதியானதை அடுத்து கரூர் நீதிமன்றம் மூடப்பட்டது. மேலும், கரோனாவுக்குச் சிகிச்சை பெற்ற முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கரூர் வடக்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்த 78 வயது முதியவர், உடல்நலக் குறைவு மற்றும் கரோனா பாதிப்புடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (ஜூலை 21) சேர்க்கப்பட்டார். ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளுடன் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
கரூர் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் வடக்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபருக்குக் கடந்த 17-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நேற்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் இன்று (ஜூலை 22) வெளியான நிலையில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என 10 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, கரூர் நீதிமன்ற வளாகம் மூடப்பட்டது. மாவட்டத்தில் மேலும் 3 பேர் என இன்று ஒரே நாளில் 13 பேருக்குக் கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
