

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 22) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 8,888 இரண்டாம் நிலைக் காவலர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று உடல் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற 20 ஆயிரம் பேரில், இறுதியாக அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் 8,538 காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப காவலர்கள் நிரப்பப்பட்டு அவர்களுக்குப் பணி நியமனமும் வழங்கப்பட்டது.
மேலும், அதற்குப் பின்னரும், தமிழ்நாட்டில் காவலர் பற்றாக்குறை அதிகம் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் காவலர் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாலும், அரசின் நிதி நெருக்கடி இன்னும் அதிகமாகிவிடும் என்பதையும் கருத்தில் கொண்டு 2019-20 ஆம் ஆண்டு அனைத்துத் தகுதிச் சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை காவலர் பணியில் அமர்த்தலாம் என்றும், அரசாங்கத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படாது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
மேலும், 2019-2020 இல் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான தகுதிச் சுற்றுகளில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களையும், தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, தற்போதுள்ள கரோனா சூழ்நிலையின் காரணமாக தேர்வு நடத்துவது கடினம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதைத் தவிர, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலையும் கருத்தில் கொண்டு 2019-20 ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் பணிக்கான அனைத்துத் தகுதிச் சுற்றுகளில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரையும் காவலர் காலிப் பணியிடங்களில் நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டால், தேர்வான அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மட்டும்தான் நடத்தப்பட வேண்டியிருக்கும்.
மேலும், இதேபோன்று, 1985, 1988, 1993, 1996, 1999, 2006 ஆகிய வருடங்களில் அதிகமாக காவலர்கள் தேவைப்பட்டதாலும், அப்போதைய சூழ்நிலையில் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னரும், மீதமுள்ளவர்கள் நான்கு பிரிவுகளாக காவலர் பணியில் தேர்வு செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டு, தற்போது காவலர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காவலர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னரும், மீதமுள்ள அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தற்போதுள்ள காவலர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் காவலர்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்பட்டு, கரோனாவை எதிர்கொள்வதற்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைப் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கும் உதவிகரமாக இருக்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்கி, தமிழ்நாட்டுக்குச் சேவை செய்ய வாய்ப்பு வழங்குகிற வகையில் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.