

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, தருமபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.
நாளை வட கடலோரத் தமிழகம், புதுவை, காரைக்கால், சென்னை, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, தருமபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சித்தாருவில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஜூலை 22-ம் தேதி மாலத்தீவு, லட்சத்தீவு, தெற்கு கேரளா மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 23-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 24-ம் தேதி மத்தியக் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 25-ம் தேதி முதல் ஜூலை 26-ம் தேதி வரை மத்திய தரைக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 22-ம் தேதி முதல் ஜூலை 26-ம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.