

மதுரையில் இதுவரை 167 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 வாரமாக உயிரிழப்பு இல்லாத நாளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த 2 மாதமாக கரோனாவின் தாக்கம் உச்சமாக உள்ளது. நேற்று வரை 8517 பேர் இந்த தொற்று நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4,934 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். 167 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமும் சராசரியாக 100 முதல் 200 பேர் வரை இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் வழக்கம்போல் கூட்டம், கூட்டமாக பொதுஇடங்களில் நடமாடத் தொடங்கியுள்ளனர்.
அதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது மாநகராட்சி, சுகாதாரத்துறைக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.
சராசரியாக 5 பேர் தினமும் உயிரிழந்தநிலையில் சில நாட்கள் இடைஇடையே 8 பேர், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 8-ம் தேதி 9 பேர், 9-ம் தேதி 9 பேர், 10-ம் தேதி 6 பேர், 11-ம் தேதி 10 பேர், 12-ம் தேதி 5 பேர், 13-ம் தேதி 4 பேர், 14-ம் தேதி 4 பேர், 15-ம் தேதி 5 பேர், 16-ம் தேதி 5 பேர், 17-ம் தேதி 4 பேர், 18-ம் தேதி 9 பேர், 19-ம் தேதி 8 பேர், 20-ம் தேதி 5 பேர், 21-ம் தேதி 7 பேர் என உயிரிழப்பு இல்லாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்தத் தொற்று நோயால் இறப்போர் எண்ணிக்கை தொடர்கிறது.
இந்நிலையில், தொற்று பரவலைத் தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள அரசு குறிப்பிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என அரசுத் துறைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மதுரை மக்களோ தொடர்ந்து சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிவதையும் காற்றில் பறக்க விடுகின்றனர்.