Published : 22 Jul 2020 12:23 PM
Last Updated : 22 Jul 2020 12:23 PM

இனிமேலாவது மதத் துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்; கந்தனுக்கு அரோகரா; ரஜினி ட்வீட்

இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும் என, ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

'கறுப்பர் கூட்டம்' என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு, இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தமிழக பாஜக உட்பட பல்வேறு தரப்புகளின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர், அந்த சேனலைச் சேர்ந்த தொகுப்பாளர் சுரேந்தர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரைத் தமிழக காவல்துறையினர் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை வரும் ஜூலை 30 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக, ரஜினிகாந்த் இன்று (ஜூலை 22) தன் ட்விட்டர் பக்கத்தில், "கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக, தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x