

ஃபாஸ்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முடிவின்படி ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் அடையாள அட்டையைப் பெறாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணத்தைச் செலுத்தினால்தான் சுங்கச்சாவடியைக் கடக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஃபாஸ்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரி சென்னை தி.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கபிலன் மனோகரன் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, ஃபாஸ்டேக் அட்டை பெற்று வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும்,பாதுகாப்பான நம்பிக்கையான பணப் பரிமாற்றம் தொடர்பாக, குறுஞ்செய்தி மூலம் ஓ.டி.பி. எண்ணோ, ரகசியக் குறியீட்டு எண்ணோ அனுப்பிய பின்னர்தான் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (ஜூலை 22) தீர்ப்பளித்த நீதிபதி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.