சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அக்டோபர் 14-ம் தேதி வரை பெயர்கள் சேர்க்கலாம்

சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அக்டோபர் 14-ம் தேதி வரை பெயர்கள் சேர்க்கலாம்
Updated on
1 min read

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ரிப்பன் மாளிகையில் மாவட்ட முதன்மை அலுவலரான மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார்.

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் அக்டோபர் 14-ம் தேதி வரை பெயர்களை சேர்க்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல் ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் மண்டல அலுவலகங்களிலும் வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2016 அன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் (அதாவது, 01.01.1998-ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) பெயர் சேர்க்க படிவம்-6ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்க படிவம்-7ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம்-8ஐ பூர்த்தி செய்தும், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-8ஏ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 15.09.2015 முதல் 14.10.2015 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள்

செப்டம்பர் 20-ம் தேதி மற்றும் அக்டோபர் 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அச்சமயம் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சமர்ப்பிக்கவும் செய்யலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த 05.01.2015 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 11ஆயிரத்து 714, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 21 ஆயிரத்து 905 மற்றும் இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 769, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 34 ஆயிரத்து 388 ஆகும். தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 20 ஆண் வாக்காளர்கள், 42 ஆயிரத்து 55 பெண் வாக்காளர்கள் மற்றும் 34 இதர வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in