

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள போசம்பட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களான அதிமுகவைச் சேர்ந்த பரமசிவம் தரப்பினருக்கும், திமுகவைச் சேர்ந்த செல்லையா தரப்பினருக்கும் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் அரிவாள், கம்புகளுடன் நேற்றும் மோதிக் கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் கற்களையும் வீசி எறிந்தனர்.
இதில், காயமடைந்த 14 பேர் கீழாநிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூட்டத்தைக் கலைப்பதற்காக கே.புதுப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சரவணன், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதை யடுத்து, அங்கு நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
பின்னர், மோதல் நடைபெற்ற இடத்தில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, புதுக்கோட்டை எஸ்.பி பாலாஜி சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, “இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்” என டிஐஜி ஆனி விஜயா தெரிவித்தார்.
போசம்பட்டியைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.