

நில அபகரிப்பில் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள வக்ஃபு வாரிய நிலத்தை மீட்ட முதல்வருக்கு முஸ்லிம் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் நிலோஃபர் கபீல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை விருகம்பாக்கம் எல்லைக்குட்பட்ட 3 ஏக்கர் 28 சென்ட் நிலத்தை கடந்த 1913-ம் ஆண்டு ஓர் அறக்கட்டளை (வக்ஃபு) வாங்கியது. இந்த அறக்கட்டளை பின்னர்தமிழ்நாடு வக்ஃபு வாரிய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது. அந்த நிலத்தை இன்றுவரை தமிழ்நாடு வக்ஃபு வாரியமே குத்தகை விட்டு பராமரித்து வருகிறது.
இதற்கிடையே, பதிவு செய்யப்படாத உருது மொழி பத்திரத்தின் மூலம் போலி ஆவணங்களை உருவாக்கி அந்த நிலத்தை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிரையம் செய்துள்ளனர். கிரையம் பெற்றவர் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திடம் பல்நோக்கு அடுக்குமாடி கட்டிடம் கட்ட ஒப்பந்தம் போட்டார். இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த குத்தகைதாரர், முஸ்லிம்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தலையிட்டு பல்வேறு வகையான சட்டப் பேராட்டங்களை நடத்தினர்.
2000-ம் ஆண்டில் சென்னை வக்ஃபு தீர்ப்பாயத்தில் சொத்துக்கு உரிமை கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு 2018-ம்ஆண்டு வரை நிலுவையில் இருந்தது. இதை அறிந்த முதல்வர் பழனிசாமி வக்ஃபு வாரிய நிலத்தை மீட்கதனி நீதிமன்றம் அமைக்க 2018-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தர விட்டார். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கை மெரினா கடற்கரை எதிரில்அமைந்துள்ள தனி சிறப்பு நீதிமன்றம் எடுத்து விசாரித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வக்ஃபு வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்த நிலத்தில் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான நிலம் என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக சில அரசியல் குறுக்கீடுகளால் தடைபட்டு வந்த வக்ஃபு வாரிய இடத்தை மீட்ட முதல்வர் பழனிசாமியையும், வாதாடிய வழக்கறிஞர்களையும் முஸ்லிம்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். அரசு வழிகாட்டு மதிப்பின்படி ரூ.100 கோடி மதிப்புள்ள வாரிய நிலத்தை மீட்ட முதல்வருக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.