

திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
தலித் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்நாடு தூய்மை பொதுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அவ்வமைப்பினர் கூறியதாவது:
''சென்னையில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுகவின் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, தலித் மக்களை இழிவான முறையில் விமர்சித்துப் பேசினார். இதற்குத் தலித் அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை, கோவை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர் மீது போலீஸில் புகார் அளித்தும், வெகு நாட்களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், உடல்நலக் குறைவு, வயது ஆகியவற்றைக் காரணம் காட்டி அவர் ஜாமீன் பெற்றார். ஆனால், திமுகவின் பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையில், மத்திய எஸ்.சி./எஸ்.டி. ஆணையம், சட்டப்பிரிவு 338-ன்படி ஆர்.எஸ்.பாரதி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 15 நாட்களுக்குள் ஆர்.எஸ்.பாரதி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு டிஜிபிக்கு எஸ்.சி./எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இனியாவது ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
சாதி மறுப்பு, சமத்துவம் என்று பேசும் திமுகவினர், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சைக் கண்டிக்கவில்லை. மேலும், எம்.பி. தயாநிதி மாறனும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பொதுவெளியில் மோசமாகப் பேசியுள்ளார். மறுக்கப்பட்ட நீதிக்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தின் நடவடிக்கை சாதி ஆணவப் பேச்சுக்குத் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்''.
இவ்வாறு அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.