4000-ஐ நெருங்கும் மொத்த பாதிப்பு: தூத்துக்குடியில் மேலும் 269 பேருக்கு கரோனா- 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் அடைப்பு

தூத்துக்குடியில் கரோனா பரவலை தடுக்க வகையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தகர ஷீட்டுகளால் அடைக்கப்பட்டுள்ள சண்முகபுரம் பகுதியை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடியில் கரோனா பரவலை தடுக்க வகையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தகர ஷீட்டுகளால் அடைக்கப்பட்டுள்ள சண்முகபுரம் பகுதியை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 269 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-ஐ நெருங்கியுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க தூத்துக்குடி மாநகரில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் தகர ஷீட்டுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று கடந்த சில வாரங்களாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,645 ஆக இருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 269 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,914 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.

குறிப்பாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தகர ஷீட்டுகள் மூலம் மூடி சீல் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று மட்டும் சண்முகபுரம் பிரதான சாலை, தாமோதரநகர் சாலை, வண்ணார் தெரு, தச்சர் தெரு, பிரையண்ட் நகர் 3, 7, 8 மற்றும் 9-வது தெருக்கள், பூபால்ராயர்புரம் பிரதான சாலை, சாரங்கபாணி தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் தகர ஷீட்டுகள் மூலம் அடைக்கப்பட்டன.

மேலும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இந்தப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், நகர்நல அலுவலர் அருண்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து, மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

கரோனா தொற்று உள்ளவர்களை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், தொற்று பரவலை தடுக்கவும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தினமும் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் நேற்று சண்முகபுரம், பூபால்ராயர்புரம், சாரங்கபாணி தெரு, துறைமுக ஊழியர் குடியிருப்பு ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் 200-க்கும் மேற்பட்டோரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in