

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரிசோதனை செய்யும்வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் கடந்த மாதம் வரை 174 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அதன்பிறகு இன்று (ஜூலை 21) வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு கரோனா தொற்று மாவட்டத்தில் அதிகரித்து வருவதையடுத்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, "ஒரு நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவரோடு தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனை செய்யும் வரை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவ்வாறின்றி வெளியில் சுற்றித் திரிந்தால் பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுக்கோட்டையில் ஜூலை 24-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையின்படி வணிகர்கள் சார்பில் இன்று முடிவெடுக்கப்பட்டது.
இதேபோன்று, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டத்தில் பல்வேறு பேரூராட்சி, ஊராட்சி என 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் முழுக் கடையடைப்பு செய்யப்பட்டு வருகிறது.