

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,044 பேரைச் சிகிச்சையில் குணப்படுத்தி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த மார்ச் 27-ம் தேதி கரோனா தனி வார்டு அமைக்கப்பட்டு, அங்கு கரோனா தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சேலத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில், கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற இதுவரை 1,294 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நேற்று (ஜூலை 20) வரை 994 பேர், சிகிச்சையில் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றுக்காக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 26 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எனினும், சிகிச்சையில் குணமடைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகவே உள்ளது.
இதனிடையே, மருத்துவமனையில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த மேலும் 50 பேர், குணமடைந்ததைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, சிகிச்சையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000-ஐக் கடந்து, 1,044 பேர் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. மருத்துவமனையில் மேலும் 250 பேர், கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், 50 மற்றும் 70 வயதைக் கடந்தவர்கள் என 1,000 பேருக்கும் மேல் குணமடையச் செய்த, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு மக்களும், அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.