

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், அரசுக்கு பொதுமக்கள் தக்க பதிலடிகொடுப்பர், என திமுக மாநில துணைப் பொதுச்செயலார் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்துசெய்யக்கூடாது, கரோனா காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணத்தை முறைப்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் அவரது வீட்டின் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டச்செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா காலத்தில் மின்கட்டணத்தை முறைப்படுத்தாமல் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர்.
கேரள அரசைப்போல் பணத்தை திருப்பித்தரவேண்டும். தமிழகத்தில் கரோனா பரிசோதனை சரிவரநடத்தப்படவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறுபவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை. வருகின்ற தேர்தலில் இந்த அரசுக்கு மக்கள் தக்கபதிலடி கொடுப்பர், என்றார்.
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., அவரது வீட்டின் முன்பு திமுக நிர்வாகிகளுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.