

குமரியில் அமைச்சர்கள் ஆய்வில் பங்கேற்ற ஏ.எஸ்.பி.க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜீ ஆகியோர் கடந்த 18, 19-ம் தேதி ஆகிய இரு தினங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.
இதில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அறி, மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, கோட்டாறு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் குளச்சல், தக்கலை பகுதியில் கரோனா பராமரிப்பு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் இருந்த அவரது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்களின் ஆய்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அறி, கரோனா தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரியின் மனைவி ஆவார்.
இதைத்தொடர்ந்து சரண்யா அறிக்கும் கரோனா பரிசோதனைக்காக சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.எஸ்.பி.யுடன் தொடர்பில் இருந்த 20-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இநநிலையில் அமைச்சர்களின் ஆய்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஏ.எஸ்.பி.க்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆய்வு கூட்டம் நடந்த நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கு, ஆட்சியரின் அலுவலக அறை உட்பட பரவலாக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் அமைச்சர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.