மானாமதுரை வைகை ஆற்றில் தொடரும் மணல் கடத்தல்: லாரிகளைப் பறிமுதல் செய்த வட்டாட்சியர்- 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

மானாமதுரை வைகை ஆற்றில் தொடரும் மணல் கடத்தல்: லாரிகளைப் பறிமுதல் செய்த வட்டாட்சியர்- 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வரும்நிலையில் 5 லாரிகளை வட்டாட்சியர் பஞ்சாபகேசன் பறிமுதல் செய்தார். மணல் கடத்தலைத் தடுக்க வலியுறுத்தி 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டத்தில் மண் மற்றும் மணல் குவாரிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இருந்தபோதிலும் இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் உபரி மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று ஆறு, கண்மாய், ஓடைகளையொட்டி பகுதிகளில் உள்ள தனியார் நிலங்களில் மணல் கடத்தல் தாராளமாக நடந்து வருகிறது.

அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து கிராமமக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

சிலதினங்களுக்கு முன்பு இளையான்குடி அருகே பிராமணக்குறிச்சி பகுதியில் வைகை ஆற்றையொட்டி தனியார் பட்டா நிலத்தில் மணல் அள்ளி வந்த 50 லாரிகளை கிராமமக்கள் சிறைபிடித்தனர்.

இதேபோல் மானாமதுரை அருகே செய்களத்தூர் வைகை ஆற்றிலும் மணல் கடத்தல் நடந்து வருகிறது. தொடர் புகாரையடுத்து வட்டாட்சியர் பஞ்சாபகேசன் 5 லாரிகளை பறிமுதல் செய்தார்.

இதுகுறித்து வட்டாட்சியர் பஞ்சாபகேசன் கூறுகையில், ‘‘ மூன்று லாரிகளில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தனர். மற்ற 2 லாரிகள் குவாரியில் இருந்து நடைசீட்டை திருத்தம் செய்து எடுத்து வந்தனர். இதனால் 5 லாரிகளையும் பறிமுதல் செய்தோம்,’’ என்று கூறினார்.

இதற்கிடையில் மணல் கடத்தலைத் தடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் போராட்டம் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in