Last Updated : 21 Jul, 2020 05:27 PM

 

Published : 21 Jul 2020 05:27 PM
Last Updated : 21 Jul 2020 05:27 PM

மது விற்பனைக்கு ‘டாஸ்மாக்’ போல் மணல் விற்பனைக்கு ‘டாம்சாக்’ அமைக்கப்படுமா?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை

மதுபானம் விற்பனையை ஒழுங்குபடுத்த டாஸ்மாக் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது போல், மணல் விற்பனையை ஒழங்குபடுத்த தமிழ்நாடு மணல் கழகம் அமைக்கக் கோரி தாக்கலான மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுகிறது. வைகை, காவிரி, பாலாற்றுப் படுகைகளில் மணல் கொள்ளை வெகுவாக நடைபெறுகிறது. இந்த மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் குறைவது, ஆறுகளின் இயற்கையான நீரோட்டம் பாதிக்கப்படுவது, கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 60 சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் தினமும் 100 லாரிகளில் பல ஆயிரம் லோடு மணல் எடுக்கப்படுகின்றது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களிலும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுகிறது. மணல் கொள்ளையை தடுக்க 2018-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்ந்தால் இயற்கையின் சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு மனித வாழ்வுக்கு பேராபத்து ஏற்படும். எனவே, தமிழகத்தில் மது விற்பனையை ஒழுங்குபடுத்த டாஸ்மாக் நிறுவனம் அமைக்கப்பட்டது போல், மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு மணல் கழகம் (டாம்சாக்) அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை தமிழகம் முழுவதும் அரசு நிலம் மற்றும் ரயத்துவாரி பட்டா நிலங்களில் உபரி, உவர், சவுடு, வண்டல், சரளை மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x