

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளன என்று புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் என்.கோகுலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் என்.கோகுலகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஜூலை 21) நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்கணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், நலவழித்துறை நோய்த்தடுப்பு பிரிவு துணை இயக்குநர் கே.மோகன்ராஜ், அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு, நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாநிலங்களவை உறுப்பினருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
கூட்டத்துக்குப் பின்னர் என்.கோகுலகிருஷ்ணன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 135 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குணடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கரோனா பரவல் தடுப்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு, திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. இப்பணியில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் இத்தருணத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பரவலைக் குறைப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தளர்வின்றிச் செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளேன்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு 3 வென்டிலேட்டர்கள் வாங்க ரூ.37.50 லட்சம், முழுமையான வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனம் வாங்க ரூ.22.50 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது. மருத்துவமனையில் தற்போது போதுமான அளவில் வென்டிலேட்டர்கள் உள்ளதால், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இசிஜி இயந்திரம் உள்ளிட்ட வேறு கருவிகள் வாங்கித் தர மருத்துவ அதிகாரிகள் கோரியுள்ளனர். இது தொடர்பாக புதுச்சேரி நலவழித்துறை இயக்குநரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும்".
இவ்வாறு கோகுலகிருஷ்ணன் தெரிவித்தார்.