

மாநிலங்களில் ஆளுநர் இல்லாத ஆட்சி இருக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரடங்கு காலத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 21) நடைபெற்றது. அதன்படி, காட்பாடி காந்திநகரில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் அவரது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மின் கட்டண உயர்வுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறும்போது, "தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கரோனா பாதிப்பில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளார். அவர் குழப்பத்தில் இருக்கிறார். மின் கட்டணத்தில் குளறுபடி செய்ததே அவர்தான். தமிழக அரசு அனைத்து உரிமைகளையும் கொண்டுபோய் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டது.
மத்திய அரசு திராவிடக் கொள்கைக்கு எதிரான கருத்தை உடையது. பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பது எல்லாம் பாஜகவின் சிந்தனையில் கிடையாது. அவர்களுக்கு இந்துத்துவா என்பதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது.
தமிழக அரசு கரோனா நிதியைக் கேட்டு வாங்கவில்லை. எந்தக் காலத்திலும் மத்திய அரசு நிதியை கொட்டிக் கொடுத்ததில்லை.
அனைத்து ஆட்சியிலும் வாதாடித்தான் வாங்க வேண்டியுள்ளது. கறுப்பர் கூட்டத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கான தேவையும் திமுகவுக்கு இல்லை.
மாநிலங்களில் ஆளுநர் இல்லாத ஆட்சிதான் இருக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. ஆளுநர்தான் ஒரு ஆட்சியின் நிர்வாகத்தைக் கையில் வைத்திருக்கிறார் என்பது அபத்தம் என்பதை புதுச்சேரி அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது" என்று தெரிவித்தார்.