Published : 21 Jul 2020 05:20 PM
Last Updated : 21 Jul 2020 05:20 PM

பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்கும் வகையில் நீதிமன்றத்தில் வாதாடும் பாமக: மார்க்சிஸ்ட் விமர்சனம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்கும் வகையில் பாமக நீதிமன்றத்தில் வாதாடுவது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கும் செயலாகும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 21) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி, தமிழக அரசும் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு இளநிலைப் படிப்பில் 15 சதவீத இடங்களையும், முதுநிலை படிப்பில் 25 சதவீத இடங்களையும் ஒதுக்க வேண்டும் என 1986 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில், அகில இந்திய தொகுப்புக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பின்னர், முதுநிலையில் 25 சதவீத இடங்களில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உச்ச நீதிமன்றம் இத்தொகுப்பில் இட ஒதுக்கீடு கொள்கை அமலாக்க வேண்டும் எனக் குறிப்பிடாமல் விட்டுவிட்டது.

2006 ஆம் ஆண்டில் அபய்நாத் என்பவர் தொடுத்த வழக்கில் பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அகில இந்திய தொகுப்பில் பட்டியல் இனமக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் 15 மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பட்டியல் இன மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் வேறுசில இட ஒதுக்கீடுகளையும் மத்திய அரசு அமலாக்கி வருகிறது.

ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இதுவரை அகில இந்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சொல்லில் அடங்காது.

இந்நிலையில், அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் 1994-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு 50 சதவீதம், பட்டியல் இன மக்களுக்கு 18 சதவீதம், பழங்குடி இனமக்களுக்கு 1 சதவீதம் என மொத்தம் 69 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் கோரப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிகளும் தமிழக அரசும் ஒத்தக் கருத்தோடு இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ள நிலையில், பாமக மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின்படி 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

பாமகவின் கோரிக்கையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் 23 சதவீத இடங்களை விட்டுக்கொடுப்பதாக அமைந்துள்ளது. இது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையைச் சீர்குலைப்பதாக உள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்கையில் இட ஒதுக்கீடு குறித்து அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதியின்படி, அந்தந்த மாநிலங்களில் அமலில் இருக்கும் இட ஒதுக்கீடுக் கொள்கையினைச் செயல்படுத்த வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதியின்படி, தமிழகத்தில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டப்படியே (1994) இட ஒதுக்கீடு அமலாகுவது மருத்துவக் கவுன்சிலின் விதிப்படி கட்டாயம் ஆகும். இதன்படி பி.சி., எஸ்.சி., எஸ்.டி. முறையே 50, 18, 1, சதவீத இடங்கள் கிடைத்திருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு சட்டப்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடங்களை வழங்காமல் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. இதனால், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் கிடைத்திருக்க வேண்டிய இடங்கள் பறிபோயுள்ளன.

அதேபோல பட்டியல் இனமக்களுக்கு 18 சதவீத இடம் வழங்குவதற்கு மாறாக 15 சதவீத இடங்களை மட்டுமே வழங்கி வருகிறது. மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்கைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க முன்வந்திருப்பது பாராட்டத்தகுந்தது.

ஆனால், சமூக நீதி பேசும் பாமக, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்கும் வகையில் நீதிமன்றத்தில் வாதாடுவது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கும் செயலாகும். பாமக தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x