

எந்த மதத்திலும், யாரை புண்படுத்தினாலும் அரசு வேடிக்கை பார்க்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் திறப்பு விழா நடந்தது.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் குருமலை ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பாறைப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.15 லட்சத்தில் கட்டப்பட்ட ஊரக நூலகம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, கீழப்பாறைப்பட்டியில் இருந்து மேலப்பாறைப்பட்டி வரை 700 மீ தூரத்துக்கு ரூ.17 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை பணிகளை ஆய்வு அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர், தெற்கு வண்டானத்தில் இருந்து புதுப்பட்டி வரை 1.9 கி.மீ ரூ.71 லட்சம் மதிப்பில் தூரத்துக்கு அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலையை ஆய்வு செய்தார்.
வடக்கு வண்டானத்தில் இருந்து புதுப்பட்டி வரை 2 கி.மீ. தூரத்துக்கு ரூ.52 லட்சத்தில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, குருவிநத்தம் ஊராட்சி இலந்தப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7.70 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் திறந்து வைத்து பார்வையிட்டார். குப்பனாபுரத்தில் இருந்து கொப்பம்பட்டி வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.7.05 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், காமநாயக்கன்பட்டியில் ரூ.17.65 லட்சத்தில் கட்டப்பட்ட ஊரர்டசி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் ரூ.10 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியா மதசார்ப்பற்ற நாடு. இறையாண்மையைப் போற்றுகிற நாடு. யார் எந்த மதத்தை புண்படுத்தினாலும், இதனை ஒரு மக்கள் இயக்கமாக சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
தமிழக அரசு கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்துக்கு சீல் வைத்து, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது. எந்த மதத்திலும், யாரை புண்படுத்தினாலும் அரசு வேடிக்கை பார்க்காது, என்றார் அவர்.
விழாக்களில், சட்டப்பேரவை உறுப்பினர் பி.சின்னப்பன், கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், சசிகுமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ப்ரியா குருராஜ், சந்திரசேகரன் மற்றும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.