

மின் கட்டணம் பல மடங்கு வசூலிப்பதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து பொன்முடி எம்எல்ஏ தன் வீட்டின் முன் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் கடந்த 16-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் கரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை பல மடங்கு வசூலிப்பதாக அதிமுக அரசைக் கண்டித்து இன்று (ஜூலை 21) வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராட வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்களின் இல்லங்களின் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அந்தவகையில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரான பொன்முடி எம்எல்ஏ தலைமையில் மாவட்டப் பொருளாளர் ஜனகராஜ், நகரச் செயலாளர் சக்கரை மற்றும் விசாலாட்சி பொன்முடி உள்ளிட்ட திமுகவினர் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கையில் கறுப்புக் கொடியை ஏந்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.