

மின் கட்டண உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினர் இன்று கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், மின் கட்டணக் கணக்கீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தியும், ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தில் சலுகை மற்றும் அவகாசம் வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளரான பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தெற்கு மாவட்ட திமுக சார்பில், உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து கிராமத்தில் உள்ள தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், உடன்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாலசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து திமுக நிர்வாகிகளும் தங்களது வீடுகளுக்கு முன்பாக கறுப்பு ஆடை அணிந்து, கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.